உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்

கடலுார் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் மாநகராட்சி பஸ் நிலையத்தில், இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கடைகள் வைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு முறை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு முறையும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் கால அவகாசம் அளித்து சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமையிலான அலுவலர்கள் பஸ் நிலையத்தில் சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்தனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகளிடம் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் கடைகளை தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றினர். மேலும், இனி வரும்காலங்களில் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ