| ADDED : ஜூன் 22, 2024 04:47 AM
கடலுார் : தினமலர் செய்தி எதிரொலியாக, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலத்தில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த சானிட்டரி நாப்கின்கள் அகற்றப்பட்டது.பள்ளி மாணவியர் மற்றும் இளம்பெண்களின் சுகாதாரத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. பள்ளி மாணவிகள், பெண்களுக்கு புதுயுகம் என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.அரசு திட்டம் மூலம் வழங்கப்படும் சானிட்டரி நாப்கின் பண்டல்கள், கடலுார் பீச் ரோட்டில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அட்டை பெட்டிகளில் சுகாதாரமற்ற நிலையில் மலைப்போல் குவிந்து கிடந்தது.இதனால், பல லட்சம் மதிப்பு நாப்கின்கள் பாழாகிறது என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, துணை இயக்குனர் அலுவலகத்தில் அட்டை பெட்டிகளில் குவிந்து கிடந்த நாப்கின்கள் அகற்றப்பட்டது.