| ADDED : ஏப் 20, 2024 05:18 AM
திட்டக்குடி : தமிழகம் முழுவதும் நேற்று லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவையொட்டி ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கள்ளச்சந்தையில் சரக்கு விற்பவர்கள், சரக்குகளை வாங்கி பதுக்கிவந்தனர். ஆனால் கடலுார் லோக்சபா தொகுதியில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா இல்லாததால், குடிமகன்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடி பிரியர்கள் பணம் இல்லாமல் திண்டாடினர். நேற்று திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி, ஆவினங்குடி, ராமநத்தம், ஆவட்டி பகுதியில் டாஸ்மாக் சரக்கு விற்பனை அமோகமாக இருந்தது. ரூ.145 விலையுள்ள குவார்ட்டர் பாட்டில் ரூ.250 வரை காலையில் விற்றது. மதியத்திற்கு மேல் அது ரூ.300, ரூ.350, ரூ.400 என விலை ஏறிக்கொண்டே இருந்தது. பணப்பட்டுவாடா இல்லாததால் ஒரு குவார்ட்டராவது வாங்கிவிட வேண்டும் என கள்ளச்சந்தையில் மது விற்ற பகுதிகளில் சுற்றிவந்தனர். தெரிந்த அரசியல்கட்சி பிரமுகர்கள், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் என எல்லோரிடமும் கெஞ்சி கூத்தாடியும் ஒரு குவார்ட்டருக்குரிய தொகையைக் கூட பெற முடியாமல் திண்டாடினர். இதனால் தேர்தல் தொடர்பாக ஏற்படும் வாக்குவாதங்கள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் முடிந்தது. அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்காதது, யாருக்கு பிரயோஜனமோ, இல்லையே நம்முடைய பணிகள் சிறப்பாகவே முடிந்தது என போலீசார் மகிழ்ச்சியுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.