உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தண்டவாளம் அருகே தீ: எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

தண்டவாளம் அருகே தீ: எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயில் பாதை அருகில் ஏரியில் விழல்கள் தீப்பிடித்து எரிந்ததால், அனுவ்ராத் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு, தாமதமாக புறப்பட்டு சென்றது.ராஜஸ்தான் மாநிலம், பிக்கானியரில் இருந்து கடந்த 26ம் தேதி மாலை மதுரைக்கு புறப்பட்ட அனுவ்ராத் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 2:34 மணிக்கு, கடலுார் மாவட்டம் , பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் அருகே வந்தது. அப்போது, ரயில்பாதையையொட்டி இருபுறமும் உள்ள நல்லபெருமாள் ஏரி விழல் தீப்பிடித்து எரிந்ததை கண்ட லோகோ பைலட் ரயிலை நிறுத்தி விருத்தாசலம் ரயில்வே போலீசார் மற்றும் தாழநல்லுார் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் ஏரி பகுதிக்கு செல்ல வழியில்லாததால், தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று செடி, தழைகளை கொண்டு தீயை அணைத்தனர். பின்னர் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது. தீ விபத்தால் ரயில் செல்லும் மின்கம்பிகள், சிக்னல்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.ஐந்து மாதங்களில் மூன்று முறை இந்த ஏரியின் விழல் தீப்பிடித்து எரிந்து ரயில்கள் தாமதாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ