| ADDED : ஜூலை 30, 2024 11:34 PM
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி உள்ளது. காலை, மாலை வேளைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். பழமையான கல்லுாரி என்பதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.கல்லுாரியை சுற்றியும் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி கல்லுாரி வளாகங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு அரங்க கட்டடத்தில் உள்ள உயிரியல் துறை வகுப்பறையில் சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனால் பேராசிரியர்கள், மாணவர்கள் சிலர் அலறியடித்துக் கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்புத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று, வகுப்பறையில் சுற்றித்திரிந்த 7 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து, அருகிலுள்ள காப்புக்காட்டில் விட எடுத்துச் சென்றனர்.விஷத்தன்மை இல்லாத சாரைப்பாம்பு என்பதால் பிரச்னை இல்லை என்றும்; விஷத்தன்மை கொண்ட நாகம் அல்லது வேறு வகை பாம்புகள் புகுந்தால் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. எனவே, கல்லுாரி வளாகத்தில் முட்புதர்களை அகற்றி, துாய்மை படுத்த மாவட்ட நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.