| ADDED : ஜூலை 02, 2024 04:44 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், கர்ப்பப்பை அகற்றியும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து நோய் தீர்க்கப்பட்டது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதா மனைவி வைரம்,45; இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 9 ஆண்டிற்கு முன் தீராத வயிற்று வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டது.இருப்பினும், வயிறு வலி உபாதையால் அவதிப்பட்ட வைரம், கடந்த 13ம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அவரை முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில், வைரத்திற்கு கர்ப்பப்பையை நீக்கி, வாலட் ப்ரோலேப்ஸ் பொருத்தியிருப்பது கண்டறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 'காஸ்ட்ரோ என்டாலஜி' எனப்படும் அறுவை சிகிச்சையை, சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் சிவசுப்ரமணியன் தலைமையில் டாக்டர்கள் அய்யப்பன், மணிவண்ணன், பாலமுருகன், மயக்க மருந்து நிபுணர் தேவானந்த் மற்றும் செவிலியர்கள் சக்திபிரேமா, உமா மகேஸ்வரி, சக்தி பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர், 'லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது வைரம் நலமாக உள்ளார்.தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செய்து முடித்த, மருத்துவக் குழுவினருக்கு, வைரத்தின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.