உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரிப்பு: என்.எல்.சி., விஜிலென்ஸ் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரிப்பு: என்.எல்.சி., விஜிலென்ஸ் அதிகாரி தகவல்

நெய்வேலி: தமிழகத்தில் நகரமயமாக்கல் மிக வேகமாக நடந்து வருவதாக என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசினார்.நெய்வேலி புத்தக கண்காட்சியில், கடலுார் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை, விருத்தாசலம் 3 வது கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். அப்போது நடந்த நுால் வெளியீட்டு விழாவில் என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்று பேசியதாவது:தமிழகத்தில் நகரமயமாக்கல் மிக வேகமாக நடந்து வருகிறது. கடந்த காலத்திலும் சோழ மன்னர்கள் ஆட்சியில் பல நாடுகளுடன் வணிக தொடர்புகளை கொண்டிருந்தது. நமது கடந்த கால நடைமுறைகள் தான் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் மிகச்சிறந்த உத்வேகத்தை அளிக்கிறது.அரசியலமைப்பை நமக்கு வழங்கிய அம்பேத்கர், அனைத்து பாடங்களையும் படிக்கும் ஆர்வமுள்ளவராக திகழ்ந்தார். அதேபோல நாம் ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துக்களை கொண்ட புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தக வாசிப்பு நாம் சந்திக்கும் சிக்கல்களுக்குரிய சமநிலையான அணுகுமுறையை பெற உதவும் என, தெரிவித்தார்.சென்னை அண்ணா பல்கலை., துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை அளிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். கடந்த காலத்தில், இந்தியா அதிக வளர்ச்சி சதவீதத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அந்நிய ஆட்சிக்குப் பிறகு வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளில், தற்போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சதவீதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றார்.நிகழ்ச்சியில், பாவலர் மலரடியான், சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த பதிப்பாளரகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். சுப்ரமணிய பாண்டியன் எழுதிய பஞ்சவர்ணகிளி மற்றும் பூபதி எழுதிய சூறாவளி ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !