| ADDED : ஏப் 25, 2024 03:43 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சதய உற்சவ விழா நேற்று துவங்கியது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், அப்பர் புராணத்தில் அருளியபடி 10 நாட்கள் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியில் திலகவதியார் மருள்நீக்கியாருக்கு திருநீற்றை அளித்தல், வீரட்டானேஸ்வரர் அருளால் சூளைநோய் நீங்கி நாவுக்கரசர் தடுத்தாட்கொண்டு அருளிய நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடந்தது.இன்று (25ம் தேதி) சமணர்கள் அப்பர்பெருமானை சுண்ணாம்பு நீற்றறையில் இடுதல், யானை ஏவுதலும், நாளை (26ம் தேதி) மாலை அப்பர் பெருமானை கடலில் சுண்ணாம்பு கல்லால் வீழ்த்திடும் நிகழ்ச்சி தெப்ப திருவிழா, 27ம் தேதி மாலை திருவிலைச்சனை பெற்ற நிகழ்ச்சி, திருவடி சூட்ட விண்ணப்பித்தல், திருவடி சூட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.28ம் தேதி காலை 7:00 மணிக்கு திலகவதியார் நந்தனவத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளல், அப்பூதியடிகள் அடிகளாரை கண்டு உரையாடி அவருடன் அமுத உண்பதற்கு முன் அவரது மகனை பாம்பின் விஷம் நீக்கிய நிகழ்ச்சி நடக்கிறது.மே 1ம் தேதி சமணர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்க பெருமானை வெளிபடுத்தி வணங்கிய நிகழ்வு. மாலை நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம். மே 2ம் தேதி லிங்காரெட்டிப்பாளையம் விநாயகர் கோவில் நந்தவனத்தில் சிவபெருமான் பொதிகட்டமுது சோறு தந்தருளிய ஐ தீக நிகழ்ச்சியும், 3ம் தேதி பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கயிலாய காட்சியும், திருபுகளுாரில் அப்பர் பெருமான் முக்தி அடையும் நிகழ்வும் நடக்கிறது.