உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

விருத்தாசலம்: விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.விருத்தாசலம், காட்டுக்கூடலுார் சாலையில், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி 5.41 கோடி ரூபாயில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதில், மார்க்கெட் வளாகத்தில் ஒரு பகுதியில் புதிதாக கடைகள் கட்டப் பட்ட நிலையில், மீதமுள்ள பகுதியில் கடைகள் கட்டப்பட வேண்டும்.இதற்காக, அங்குள்ள கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, 13 தரைக்கடைகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 10:00 மணி முதல், நிரந்தர கடைகளை அகற்றும் பணி துவங்கியது. ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன், நகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.அங்குள்ள வியாபாரிகள், தாங்களாகவே பொருட்களை அகற்றிக் கொண்டனர். இதனால் மேற்கூரைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். முற்றிலுமாக கடைகளை அகற்றி, புதிதாக கடைகள் கட்டும் பணி ஓரிரு நாட்களில் துவங்கும் என நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஐயனார், ரவிக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ