உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீரப்பாளையம் - சிதம்பரம் 4 வழிச்சாலை பணிகள் மந்தம்

கீரப்பாளையம் - சிதம்பரம் 4 வழிச்சாலை பணிகள் மந்தம்

புவனகிரி : கீரப்பாளையத்தில் இருந்து சிதம்பரம் புறவழிச்சாலைவரை இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக துவங்கிய, விரிவாக்கப்பணிகள் மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெறிசல் ஏற்படுகிறது.தென்மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், புவனகிரி வழியாக கடலுார், புதுச்சேரி, சென்னை மற்றும் விருத்தாசலம், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் உள்ளூர் பகுதி வாகனங்கள், பைக்குகள் மற்றும் லாரிகள், சாலை விரிவாக்கப்பணிகளுக்கு மணல் ஏற்றி வரும் ராட்சச வாகனங்களும் அதிகரித்துள்ளது.தற்போதுள்ள இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைத்து,போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் நோக்கில், நெடுஞ்சாலை துறை கடலுார் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திட்டம்) சிதம்பரம் பிரிவு அலுவலகம் சார்பில் திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியதின் பேரில் ரூ.20 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. புறவழிச்சாலையில் சிதம்பரம் இணைப்பு சாலை வரை புதிய சாலையை அமைக்க, கடந்த ஜனவரி மாதம் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் துவக்கி வைத்தனர். இந்த பணிகளை விரைவாக, தரமாக முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததார்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.பணிகள் துவங்கி சாலையோர மரங்களை வெட்ட முயன்ற போது, மரங்களை குத்தகை எடுத்தவர்கள் தங்கள் செலுத்திய தொகையை கேட்டு தடுத்தனர். அதில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து மரங்களை அகற்றி பணிகள் துவங்க ஒருமாதம் ஏற்பட்டது. தற்போது சிறு பாலங்கள் கட்டும் பணிகளிலும் தொய்வுடன் சாலை விரிவாக்கப்பணி மந்த கதியில் நடக்கிறது. அதிகாரிகள் ஆய்விற்காக கீரப்பாளையம்- வயலுார் இடை பட்ட பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையை உயர்த்தி தார்சாலை அமைத்து போட்டா எடுத்தனர். மற்ற இடங்களில் விரிவாக்க பணி சரியாக முடிக்க வில்லை. தோண்டிய பள்ளங்களில் மணல் நிரப்பி சரி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெறிசல் ஏற்படுகிறது. முறைப்படி அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ