| ADDED : மே 08, 2024 11:41 PM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி மின் தடை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்திற்கு சித்தரசூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக சி.என்.பாளையம் பகுதியில் குறைந்த அளவிலான மின்சாரம் மட்டுமே வருகிறது. அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது.இதுகுறித்து மின்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், லைன் டிரிப் ஆவதால் மின்சாரம் தடைபடுகிறது என, தெரிவிக்கின்றனர். இதனால் சித்தரசூர் துணை மின் நிலையத்திலிருந்து 22 கிலோ வோல்ட் மின்பாதை அமைத்து பாலுார், நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிக்கு மின்சாரம் வழங்கிட கடந்த 2022 மே மாதம் ரூ.64 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கியது. பணிகள் நிறைவு பெறாமல் ஜவ்வாக இழுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் மின்தடையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, மின்துறை அதிகாரிகள் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.