| ADDED : ஜூன் 27, 2024 03:15 AM
கடலுார்: வேப்பூர் அருகே காட்டுமைலுார் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.வேப்பூர் அருகே காட்டுமைலுார் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊராக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் மொத்தம் 233 பயனாளிகளுக்கு 39,58,388 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்துதலுக்கெதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.பின்னர் கலெக்டர் கூறியதாவது: கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், பொதுமக்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் அவர்கள் பகுதியிலேயே நேரடியாக மனுக்கள் பெற்று தகுந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது. அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.