| ADDED : ஜூன் 03, 2024 06:11 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் பகுதி வெள்ளாற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் மற்றும் வெள்ளாற்றங்கரையோர கிராமங்களான இறையூர், செம்பேரி, துறையூர், வெண்கரும்பூர், நந்தப்பாடி, மோசட்டை, கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, பெலாந்துறை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆற்றங்கரையோர நிலங்களில் போர்வெல் அமைத்து அதன் மூலம் நெல், கரும்பு, கேழ்வரகு மற்றும் தோட்டப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.அதில், பெண்ணாடம், இறையூர், முருகன்குடி வெள்ளாறு பகுதிகளில் அரியலுார், கடலுார் இரு மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகள் பாதிக்கும் என இரு மாவட்ட கிராம விவசாயிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் புகார் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, அரியலுார் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், கடந்த 2 நாட்களுக்கு முன் தளவாய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மணல் திருட்டு நடக்கும் பகுதிகளில் போலீசார் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மாட்டு வண்டிகள் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர். பெண்ணாடம் வெள்ளாற்று பகுதியில் மட்டும் இதுவரை தடை ஏற்படுத்தவில்லை.இதனால் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பது தொடர்கிறது.எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க பெண்ணாடம் பகுதி வெள்ளாற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.