விருத்தாசலம், மார்ச் 31-மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் விலக்கு கிடைக்கும் என, அமைச்சர் உதயநிதி பேசினார். விருத்தாசலம் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக உருவாக்க பரிசீலிக்கப்படும். இங்கு மகளிர் கல்லுாரி, புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்கப்படும். திட்டக்குடி வெலிங்டன் ஏரி துார்வாரப்படும். என்.எல்.சி., தனியார் மயமாவதை தடுக்கப்படும்.நெய்வேலி புதிய தாலுகாவாக உருவாக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் யார் காலிலும் விழுந்து முதல்வர் ஆகவில்லை. இ.பி.எஸ்., காலில் விழுந்து முதல்வர் ஆனவர். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் கோவிட் தொற்று தமிழகம் எங்கும் தாண்டவம் ஆடியது. அப்போது, பிரதமர் மோடி வெளியில் வரவில்லை. அவர் உங்களை விளக்கு பிடிங்க, தட்டு வைத்து ஒலி எழுப்புங்க கோவிட் ஓடிவிடும் என்றார்.காங்., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் விலக்கு அளிக்கப்படும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளும் அகற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்பா ஒரு பேச்சு, மகன் ஒரு பேச்சு
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், விருத்தாசலத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நுாறு நாளில் விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றார். ஆனால், நேற்று பிரசாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி, விருத்தாசலம் மாவட்டமாக பரிசீலிக்கப்படும் என்றார். இதனால், விருத்தாசலம் மாவட்டம் ஆகுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.