| ADDED : மே 24, 2024 05:17 AM
நடுவீரப்பட்டு: பண்ருட்டி சன்னியாசிப்பேட்டை ஊராட்சி அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ.,அலுவலகம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சி அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ.,அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் இரண்டு அலுவலகங்களையும் ஒரே கட்டடத்தில் கட்டுமான பணிகள் துவங்கியது.இதனால் தற்போது வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம சேவை மைய கட்டடத்திலும், ஊராட்சி அலுவலகம் நுாலக கட்டடத்திலும் இயங்கி வருகிறது.கிராம சேவைமைய கட்டடத்தில் ஏற்கனவே ரேஷன் கடை இயங்கி வரும் நிலையில், தற்போது வி.ஏ.ஓ., அலுவலகமும் இயங்கி வருவதால் பொதுமக்கள் தங்களது அரசு சான்றிதழ்களை தடையின்றி பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இடவசதி இல்லாததால் ஊராட்சி தலைவரை சந்திக்க முடியாமலும், மாதாந்திர கூட்டம் நடத்த இட வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, சன்னியாசிப்பேட்டை ஊராட்சி அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ.,அலுவலகம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.