| ADDED : மே 15, 2024 11:20 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் மட்டும் அவ்வப்போது பள்ளியை பார்வையிட்டு சென்று வந்தனர்.நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் 3 வகுப்பறைகளின் கதவுகளில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த சீருடை, பேக் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது.டி.வி.டி., பிளேயர் திருடு போயிருப்பதாகவும், மேலும், ஏதாவது சான்றிதழ்கள் திருடுபோனதா என ஆய்வு செய்து வருகிறோம் என ஆசிரியர் தெரிவித்தார். தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். விடுமுறையில் வகுப்பறைகளின் பூட்டை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.