உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் பாதிப்பு

நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் பாதிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள், விளம்பர போர்டுகள் இருப்பதால் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து உளுந்துார்பேட்டை மேம்பாலம் வரை 22 கி.மீ., தொலைவிற்கு 136 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில், சாலையின் இருபுறம் உயர்கோபுர மின் விளக்குகள், சிமென்ட் சிலாப்புடன் கூடிய வடிகால் போடப்பட்டது. பாதசாரிகள் வடிகால் மீதுள்ள சிமென்ட் சிலாப் வழியாக நடந்து சென்றனர்.இதனால் நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை பொது மக்களின் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அங்குள்ள ஓட்டல்கள் உணவு தயாரிக்கவும், பொருட்களை அடுக்கி வைக்கவும், விளம்பர போர்டுகளை வைத்தும் நடைபாதையை தடுத்து விட்டனர். இதனால் பாதசாரிகள் சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேரடியாக வந்து, அதிரடிப்படை போலீசார் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சி வாகனங்களில் பறிமுதல் செய்தனர். ஆனால், ஓரிரு நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு முளைத்து விட்டது.எனவே, விருத்தாசலம் நகரில் பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதிகளில் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை