சிதம்பரம்: விழுப்புரத்தில் இருந்து நாகை வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், இழு இழுவென இழுத்து வந்த, ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் மற்றும் பு.முட்லுார், சி முட்லுார்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகள் 6 ஆயிரத்து 400 கோடியில் கடந்த 2021 ம் ஆண்டு துவங்கியது. இதில், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில், கடலுார் அடுத்துள்ள பூண்டியாங்குப்பத்தில் இருந்து சீர்காழி அடுத்துள்ள சட்டநாதபுரம் வரை ஒரு பிரிவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதில் முக்கியமாக, கொள்ளிடம் ஆற்று பாலம், வெள்ளாற்று பாலம் மற்றும் பெரியப்பட்டு, புதுச்சத்திரம் , சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலங்கள் முற்றிம் முடிவடைந்து, தடையின்றி, போக்குவரத்து துவங்கி நடந்து வருகிறது. அதில், முக்கிய இடமான, பு.முட்லுார், சி.முட்லுாரில் சாலை அமைக்கும் பணியும், ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும், பல்வேறு காரணங்களால், மந்தமாக நடந்து வந்தது. அதிலும் பு.முட்லுார், சி.முட்லுார் பகுதியில் பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்ததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த 6மாதங்களுக்கு முன்பு அனைத்து வழக்களும் முடிவடைந்து சாலை பணிகள் வேகம் எடுத்தது. குறிப்பாக, கடலுார் -சிதம்பரம் சாலையில், கொத்தட்டை அடுத்துள்ள, ஆணையங்குப்பத்தில் பாலம் முகப்பிலிருந்து , பு.முட்லுார் பழைய வழித்தடத்தின், பின் பக்கம் வழியாக வெள்ளாற்றின் முன்பு இறங்கி, மீண்டும் ஆற்று பாலத்தை கடந்து, மீண்டும் பாலம் ஏறி, சி.முட்லுார் கடந்து, ராகவேந்திரா கல்லுாரியில் மீண்டும் இறங்குகிறது, இதில், சுமார் 2 கிலோ மிட்டர் துாரம், பு.முட்லுார், சி.முட்லுார் ஊர் பகுதியில் செல்லாமல், பாலத்திலேயே (பிளை ஓவர்) செல்வது போல் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியுள்ளது. அதே சமயம் இரு பக்கமும் சர்வீஸ் சாலை போடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளில் கடலுார் - சிதம்பரம் வரும் வழித்தடத்தில், இரும்பு கர்டர் மூலம் சாலை அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. தற்போது எதிர் பக்கம் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ரயில்வே சாலை என்பதால், மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனித்து செய்வதால், ரயில்வே அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் அப்பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே மேம்பால பணிகள் அடுத்த மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக ஜவ்வாக இழுந்து வந்த பு.முட்லுார், சி.முட்லுார் மற்றும் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணிகள் ஒரு வழியாக இறுதிக்கட்டதை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பு.முட்லுார், சி.முட்லுார் ஊர் பகுதியில் செல்லாமல் பாலத்திலேயே (பிளை ஓவர்) சாலையில் பயணிப்பது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரத்தில் இச்சாலை மின்னொளியில் மிதப்பதை பார்க்க ரம்மியமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மழை நீர் தேங்கும்
சாலைகள் சிதம்பரம் - கடலுார் நான்கு வழிச்சாலையில், பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சி.முட்லுாரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் முழங்கால் அளவில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை நகாய் அதிகாரிகள் முறையாக கண்காணித்து, மழை காலம் துவங்கும் முன்பே சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பல இடங்களில் விபத்துகள் நடக்கும் அபாயம் ஏற்படும். பு.முட்லுாரில் அகற்றப்படாத இ.பி. டவர் பரங்கிப்பேட்டையில் உள்ள பவர் பிளாண்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மீன்சுருட்டி வரை கொண்டு செல்லப்பட்டு, அங்கு சேமிக்கப்படுகிறது. இதற்காக வழி நெடுகிலும் பெரிய அளவிலான இ.பி., டவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பு.முட்லுார் அருகே, பைபாஸ் சாலையோரத்தில் ஒரு டவர் உள்ளது. இதுவரை இந்த டவர் மாற்றியமைக்கப்படாததால், ஒரு பக்க சாலை பணிகள் முடியாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த இடம் சமார் 200 மீட்டர் பாலம் அமைக்காமல் கிடப்பில் உள்ளது. ஆகவே உடனடியாக டவரை இடம் மாற்றி அப்பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.