| ADDED : ஜூலை 30, 2024 11:32 PM
ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒவ்வொரு முறையும் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கடைசியாக, மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அதன் பிறகு, லோக்சபா தேர்தல் வந்ததால் நடத்தப்படவில்லை. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு, கடலுார் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இம்மாதம் நடத்தப்பட்டது. ஆனால், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை. அதற்கான முயற்சியில் கூட சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை.ஒன்றிய பொது நிதியில் இருந்து, கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ஒன்றியத்தில் போதுமான நிதியில்லாததால், கூட்டம் நடத்துவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.சேர்மன் உள்ளிட்ட கவுன்சிலர்களிடம், பொது நிதியில் உள்ள நிதி நிலைமையை எடுத்துக்கூறி கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனர். தொடர்ந்து கூட்டம் நடத்தப்படாமல் உள்ளதால், ஒன்றிய குழுவுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.