| ADDED : ஆக 18, 2024 05:46 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கோவில் திருவிழா நடத்த ஒரு தரப்பினர் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தெற்கு தெருவில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த 1996ல் கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால், கோவில் திருவிழா கிடப்பில் போடப்பட்டது. பின்னர், 2016 ல் இருதரப்பினரும் சுமூகமாக பேசி தொடர்ந்து திருவிழா நடத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த ஆண்டு கோவில் திருவிழாவில் முதல் நாள் திருவிழாவை அனைவரும் பொதுவாக நடத்த ஒன்றிய கவுன்சிலர் தனபதி கூறினார். அதற்கு, முன்னாள் ஊராட்சி தலைவர் ேஹமமாலினிபாபு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, பாரம்பரியமாக நாங்கள்தான் நடத்தி வருகிறோம், இந்த ஆண்டும் நாங்கள்தான் நடத்துவோம் என, கூறினர். இப்பிரச்னை காரணமாக கோவில் திருவிழா நடத்த தாசில்தார் தடை விதித்தார்.இதற்கிடையே ஒன்றிய கவுன்சிலர் தனபதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி, முதல் நாள் திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து, விதிகள் படி நடத்திடவும், இதுகுறித்து தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண உத்தரவிட்டார்.அதன்படி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ேஹமமாலினிபாபு தரப்பினர் சமாதானம் ஆகவில்லை. அதையடுத்து, வருவாய் மற்றும் போலீஸ் தரப்பில், ஐகோர்ட்டில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த கடந்த ஜூலை 30ம்தேதிஐகோர்ட் நீதிபதி பிறப்பித்த உத்திரவில், ஒன்றிய கவுன்சிலர் தனபதி கேட்டபடி திருவிழா நடத்த பாதுகாப்பு வழஙக போலீசாருக்கு உத்திரவிட்டுள்ளார்.அதன்படி நேற்று காலை கோவில் திருவிழாவிற்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, காலை 6:00 மணியளவில், பந்தல்கால் நடும் விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ேஹமமாலினிபாபு தரப்பினர் 50 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதையடுத்து, பண்ருட்டி டி.எஸ்.பி., பழனி தலைமையில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.