| ADDED : மே 11, 2024 05:14 AM
திட்டக்குடி: ராமநத்தம் அருகே முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ராமநத்தம் ஊராட்சி, புதிய பெரங்கியம் காலனி பகுதிக்கு கடந்த நான்கு நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 7:00 மணிக்கு காலிக்குடங்களுடன் ராமநத்தம் திட்டக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார், பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று 7:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.