| ADDED : ஆக 12, 2024 05:37 AM
மந்தாரக்குப்பம்: வடக்குவெள்ளுரில் பள்ளி, ஷிப்ட் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.கடலுார்-திருச்சி, நாகூர்- பெங்களுரு, கடலுார்-சேலம் தினசரி இருமுறை பயணிகள் ரயில் நெய்வேலி மந்தராக்குப்பம் வழியாக இயக்கப்படுகிறது. இது தவிர ஊத்தங்காலில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்துக்கு தினசரி நிலக்கரி ஏற்றும் செல்லும் சரக்கு ரயில்கள் இவ்வழியாக இயக்கப்படுகின்றன. மந்தாரக்குப்பத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு செல்லும் சாலை வடக்குவெள்ளுர் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள், பள்ளி வாகனங்கள்,கனரக வாகனங்கள், பொதுமக்கள் ரயில்வே கேட்டை தினசரி கடந்து செல்கின்றனர்.விருத்தாசலம், மந்தாரக்குப்பம் பகுதியிலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் பள்ளிகளுக்கு தினசரி காலையில் 50 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. மேலும் ஷிப்ட் நேரத்தில் சரக்கு ரயில் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அலுவலக பணி, முதல் கட்டப் பணி, இரண்டாம் கட்டப் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அவசர அவசரமாக பணிக்கு செல்லும் போது வாகன விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் ரயில்வே கேட் ஊழியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.எனவே வடக்குவெள்ளுர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் குறுக்கே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள், என்.எல்.சி., தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்