வடலுார் : வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில், ஐகோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியது. அதன்படி, சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடியை, தமிழக அரசு ஒதுக்கியது. அதையடுத்து, கடந்த பிப்ரவரி 17ம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பணியை தொடங்கி வைத்தார். பணி தொடங்கி நடந்து வந்த நிலையில், பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க கூடாது என வள்ளலார் சபைக்கு நிலம் கொடுத்த பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் அ.தி.மு.க .,பா.ம.க. உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த தமிழ்வேங்கை, கடலுாரை சேர்ந்த பா.ஜ., ஆன்மிக பிரிவு நிர்வாகி வினோத் ராகவேந்திரன் ஆகியோர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க கூடாது, வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு 106 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், தற்போது 71.20 ஏக்கர் நிலம் மட்டும்தான் அரசிடம் உள்ளது. மீதமுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரித்த நீதிபதி, வள்ளலார் சர்வதேச மையம் அமைவிடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தமிழக அரசு அஸ்திவாரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் தொல்லியல் துறை ஆய்வை நடத்தினர்.மேலும் இந்த வழக்கு கடந்த மாதம் 10ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி மகாதேவன், வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறங்காவலர் குழு அமைக்க வேண்டும், அனைத்து துறையினர் அனுமதி பெற்று சர்வதேச ைமயம் அமைக்க வேண்டும் என, இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்டார்.அதையடுத்து, ஐகோர்ட் உத்தரவுபடி வடலுார் சபைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, நேற்று சபை ஆர்ச் அருகில் வைக்கப்பட்டிருந்த 6 கடைகளில் இருந்து பொருட்கள் அப்புறப்படுத்தி, சீல் வைக்கப்பட்டது. மேலும், தர்மசாலை செல்லும் வழியில் இருந்து மாட்டுத்தொழுவம் உள்ளிட்ட கொட்டகைகள் ஜே.சி.பி., மூலம் அகற்றப்பட்டது.இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணகுமார், மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.வடலுார் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.