இந்திய வனக்கொள்கைப்படி, 33 சதவீத பசுமைப்பரப்பை அடைய வேண்டி, பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் பட்டா நிலங்கள், பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. பருவமழை துவங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக மரக்கன்றுகள் வழங்கப்படும்.அதன்படி, தேக்கு, மகா கனி, வேங்கை, ரோஸ்வுட் (ஈட்டி), பூவரசு, நீர்மருது ஆகிய விவசாயிகளுக்கான டிம்பர் மரங்களும்; வி.ஆர்.ஐ., 3 உயர் ரக முந்திரி கன்றுகளும் வழங்கப்படுகின்றன. பொது இடங்கள், பள்ளி, கல்லுாரிகளில் நடும் வகையில் மகிழம், செண்பகம், மயில் கொன்றை, மஞ்சள் கொன்றை, மந்தாரை ஆகிய பூ வகை மரங்களும் வழங்கப்படும்.ஸ்தல விருட்சங்களான வில்வம், அரசு, வேம்பு, ஆல மரங்களும்; கொடுக்காபுளி, புளி, நாவல் போன்ற பழ மரங்களும்; சொர்க்கம், புங்கன், இலுப்பை, வாகை, ஆச்சா, அசோகம் போன்ற நிழல் தரும் மரக் கன்றுகளும் வழங்கப்பட உள்ளன.தேவைப்படுவோர் நிலத்தின் பட்டா நகல், ஆதார் அட்டை நகல், பயனாளியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றை தர வேண்டும். மேலும், 99525 33654, 80989 61415, 87545 48342 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.மத்திய நாற்றாங்கால், கார்கூடல், சிதம்பரம் ரோடு, வெங்கடேஸ்வரா மருத்துவமனை எதிரில், விருத்தாசலம் என்ற முகவரிக்கு நேரில் அணுகலாம். இவ்வாறு, விருத்தாசலம் வனச்சரக அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.