| ADDED : மே 03, 2024 05:42 AM
கடலுார் : மீன்பிடி தடை காலம் எதிரொலியாக கடலுார் மாவட்டத்தில் மீனவர்கள் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் கடலில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்தாண்டிற்கான மீன்பிடி தடை காலம், கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது. ஜூன் 14ம் தேதி வரையில் 61 நாட்கள் தடை காலம் அமலில் இருக்கும். இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் நல்லவாடு முதல் சிதம்பரம் அடுத்த தண்டவராய சோழகன்பேட்டை வரையிலான 49 மீனவ கிராம மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.கடலுார், கிள்ளை, அன்னங்கோவில் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடலுார் துறைமுகம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகள், கடற்கரையோர கிராமங்களில் படகுகளை மீனவர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி தடைகாலத்திற்குள் படகுகளில் பழுதடைந்துள்ள பாகங்களை மாற்றுவது, வர்ணம் பூசுவது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.