சிதம்பரம்:சிதம்பரத்தில் பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள மீதிகுடி - கோவிலாம்பூண்டி சாலையோரம் கிடந்த கல்லுாரி, பல்கலை., சான்றிதழ்களை சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் போலீசார் கைப்பற்றினர். ஆய்வில் அவை அனைத்தும் போலி சான்றிதழ் என தெரிந்தது.விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் ,37; மீதிகுடியை சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன்,48; ஆகியோர், போலி பல்வேறு கல்லுாரி மற்றும் பல்கலைகள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகர் (பொறுப்பு) கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, சங்கர், நாகப்பனை கைது செய்தனர். கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் போலி சான்றிதழ்களை அவர்கள் விற்பனை செய்திருக்கலாம், அதன் மூலம் ரூ. 4 கோடி வரை பணம் கைமாறி இருக்கலாம் என, கூறப்படுகிறது. அதையடுத்து, இருவரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.கைதான சங்கர், நாகப்பன் இருவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள். நாகப்பன், பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.போலி சான்றிதழ் விற்பனையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், இந்த வழக்கின் விசாரணை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.