சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றமாசிதம்பரம் அருகே சாலையோரம், பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைக் கழகங்களின் போலி சான்றிதழ்கள் கிடந்தது. அண்ணாமலை பல்கலைகழக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர், 37 ; மீதிகுடியை சேர்ந்த நாகப்பன்,48; ஆகிய இருவரை கைது செய்தனர்.விசாரணையில் பள்ளி, கல்லுாரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் படித்தது போன்று, போலி சான்றிதழ்கள் தயாரித்து, தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.அதையடுத்து, இந்த வழக்கில், கைதானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மூளையாக செல்பட்ட முக்கிய குற்றவாளியான கவுதமன் தலைமறைவானார்.கைதானவர்கள் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், போலி சான்றிதழ்கள் பல்வேறு மாநிலங்களில் விற்பனை நடந்திருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்ற, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல் துறை பரிந்துரைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாறலாம் என கூறப்படுகிறது.வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாறினால், அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. இதனால், பல்கலைகழக வட்டாரத்தில் பலர் சிக்குவார்கள் என்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.