| ADDED : ஜூலை 23, 2024 11:18 PM
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 69 பேர் பலியானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் அடங்கிய விழுப்புரம் சரகத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த போலீசார் வேலுார் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், விருத்தாசலத்தில் டாஸ்மாக் பார் நடத்தும் கட்சி பிரமுகர் ஒருவரின் காரை, போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. பார் உரிமையாளருடன் போலீஸ் நெருக்கத்தை அறிந்த எஸ்.பி., சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் அமைச்சருடன் அவர் ஐக்கியமாகியதால், போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினர்.இந்நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழிதேவன், பார் உரிமையாளருடன் போலீசாரின் நட்பு குறித்து காரசாரமாக பேச, அங்கிருந்த போலீசாரை நெளிய வைத்தது.