| ADDED : ஜூன் 11, 2024 11:28 PM
கடலுார் மாவட்டத்தில் ஓசையில்லாமல் ஜமாபந்தி துவங்கியுள்ளதால் பொது மக்கள் கூட்டமின்றி பல தாலுகாகளில் வெறிச்சோடி காணப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 10 தாலுகாக்கள் உள்ளன. இத்தாலுகாக்களின் வருவாய்த்துறை சார்பில் ஆண்டுதோறும் கிராம அதிகாரிகளின் கணக்கை ஆய்வு செய்வதற்காக ஜமாபந்தி நடத்துவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளான பட்டாமாற்றம், வயதானவர்கள் ஓய்வூதியம், சான்றிதழ்கள் போன்றவை அந்தந்த கிராமங்களுக்கான தேதியில் மனுவாகக் கொடுத்து தீர்வு காணப்படும். இந்த ஜமாபந்தி இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. நாளிதழ்கள் மூலமாகவும் அரசு தெரிவிக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு தெரியாமலேயே திடுதிப்பென ஜமாபந்தி துவங்கியது. இதனால் பொதுமக்கள் சார்பில் மனு கொடுப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளனர். அதனால் ஏனோதானே என நடத்தி முடித்தால் போதும் என்கிற நோக்கத்தில் ஓசையின்றி ஜமாபந்தி நடத்தப்படுகிறது.