உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் போக்குவரத்து நெரிசல்

புவனகிரியில் போக்குவரத்து நெரிசல்

புவனகிரி : புவனகிரியில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.புவனகிரியில் குறுகலான சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதையடுத்து, ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. ஆனால், காலப்போக்கில், விதிமுறை மீறி, ஒரு வழிப்பாதையிலேயே கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வருகிறது. இதனை போலீசாரும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.புவனகிரியில் ஆரம்ப காலங்களில் காலை, மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விதிமீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.ஆனால், தற்போது போக்குவரத்து சீரமைப்பில் போலீசார் ஆர்வம் காட்டாததால், நகர வீதிகளில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவது, போக்குவரத்து மிகுந்த நேரத்தில் கடைகளில் சரக்கு இறக்குவது போன்றவை நடக்கிறது. எனவே, புவனகிரியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !