உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் பாதை அருகே திடீர் தீ விபத்து பெண்ணாடத்தில் வைகை எக்ஸ்பிரஸ் தாமதம்

ரயில் பாதை அருகே திடீர் தீ விபத்து பெண்ணாடத்தில் வைகை எக்ஸ்பிரஸ் தாமதம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே ரயில் பாதையொட்டி ஏரியில் ஏற்பட்ட தீ விபத்தால், வைகை எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் - பெண்ணாடம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள குப்புடையான் ஏரியில் நேற்று காலை 10:00 மணியளவில் திடீரென விழல் தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகே ரயில் பாதையொட்டி தீ பரவியது. இதையறிந்த கேட் கீப்பர் விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால், தீயணைப்பு வாகனம் ஏரிக்குள் செல்ல முடியாததால், உடனடியாக தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன், ரயில்வே பாதுகாப்பு படையினர், பெண்ணாடம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்தனர். இதன் காரணமாக, மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் (12636), காலை 10:25 மணிக்கு அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, 20 நிமிடம் தாமதாக 10:45 மணிக்கு புறப்பட்டது. ரயில்வே போலீசார் தீ விபத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏரியில் இருந்த விழல்கள் வெயிலின் காரணமாக எரிந்ததா, விஷமிகள் யாரேனும் தீ வைத்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை