உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி விளையாட்டு திடல்கள் பயன்பாட்டிற்கு வருமா?

ஊராட்சி விளையாட்டு திடல்கள் பயன்பாட்டிற்கு வருமா?

விருத்தாசலம், : ஊராட்சிகளில் பாழாகி வரும் விளையாட்டு மைதானங்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவர்கள் நல்ல மனநிலையில், ஆரோக்கியத்துடன் படிப்பில் கவனம் செலுத்திட பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. தினசரி ஒரு பாட வேளையில் மட்டுமே விளையாட்டு பாடங்கள் எடுப்பதால், ஒரு சிலரை தவிர மற்ற மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. ஆனால், தனியார் பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளில், சிறப்பு உபகரணங்கள் மூலம் பயிற்சி தரப்பட்டு வருகிறது.இந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி முயற்சியால், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. அதில், வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.இதனால் கிராமப்புற மாணவர்கள் விடுமுறை நாட்களிலும், பள்ளி நாட்களில் மாலை வேளையிலும் விளையாடி மகிழ்ந்தனர். இதன் மூலம் விளையாட்டின் முக்கியத்துவம் உணர்ந்து, பள்ளிகளிலும் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். மேலும், உடற்பயிற்சி சாதனங்களும் வழங்கியதால் காலை, மாலையில் பயிற்சி மேற்கொண்டு இளைஞர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.நாளடைவில் மைதானம் பராமரிப்பின்றி முட்புதராக மண்டியும், உபகரணங்கள் சேதமடைந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இது விளையாட்டின் முக்கியத்துவம் உணர்ந்த ஏழை மாணவர்களின் கனவுகளை சிதைத்துள்ளது.தற்போது, தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி இருப்பதால், மாநிலம் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கேலோ இந்தியா போன்ற உலகளாவிய போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டது.எனவே, மாவட்டத்தில் ஊராட்சிகள் தோறும் பாழான விளையாட்டு மைதானங்களை சீரமைத்து, கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை