உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகாராஷ்டிராவில் இருந்து 2,500 டன் மொலாசஸ் விருத்தாசலத்திற்கு டேங்கரில் வந்திறங்கின

மகாராஷ்டிராவில் இருந்து 2,500 டன் மொலாசஸ் விருத்தாசலத்திற்கு டேங்கரில் வந்திறங்கின

விருத்தாசலம்; மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 2,500 டன் மொலாசஸ், சரக்கு ரயில் டேங்கரில் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கின. மகாராஷ்டிரா மாநிலம், வதோதரா தொழில் வர்த்தக மையத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் இருந்து, 2,500 டன் மொலாசஸ், 48 டேங்கர்கள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது. இதனை, விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் கிராமத்தில் உள்ள எஸ்.என்.ஜே., டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்., ஆலைக்கு, 40க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதற்காக, தெற்கு ரயில்வே நிர்வாக அனுமதியுடன், சரக்கு இறக்கும் தளத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிற்பகல் 2:30 மணிக்கு, சரக்கு டேங்கரில் இருந்த மொலாசஸ், டேங்கர் லாரிக்கு மாற்றும் பணி துவங்கியது. தற்காலிக மின் மோட்டார் மூலம் ராட்சத குழாய்களை இணைத்து, மொலாசஸ் மாற்றப்பட்டன. இப்பணியை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்தனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் 1929ம் ஆண்டு துவங்கியதில் இருந்து, சரக்கு ரயிலில் மொலாசஸ் ஏற்றிய டேங்கர்கள் வருவது இதுவே முதல்முறை. மொலாசஸில் இருந்து எத்தனாலை பிரித்து, பெட்ரோல் மற்றும் டீசலுடன் கலந்து பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி கூறியதால், இப்பணி மும்முரமாக நடக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், நெல்லிக்குப்பம் ஆலைகளுக்கு மொலாசஸ் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. விருத்தாசலம் காணாதுகண்டான் ஆலையை, எஸ்.என்.ஜே., நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், தற்போது முதல்முறையாக இங்கு, மொலாசஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கு எத்தனால் பிரிக்கப்பட்டதும், மத்திய அரசின் உத்தரவுப்படி அனுப்பி வைக்கப்படும். இரு நாட்களுக்கு முன் மும்பையில் புறப்பட்ட சரக்கு டேங்கர் தற்போது விருத்தாசலம் வந்தடைந்துள்ளது. இவற்றை டேங்கர் லாரிகளில் பாதுகாப்பாக மாற்றி அனுப்ப 12 மணி நேரம் வரை தேவைப்படும்' என்றார். விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு முதன் முறையாக 48 டேங்கர்களுடன் வந்து நின்ற சரக்கு ரயிலை, பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ