| ADDED : டிச 27, 2025 06:42 AM
விருத்தாசலம்: 'தினமலர்' புகார்பெட்டி செய்தி எதிரொலியாக, கொளஞ்சியப்பர் கோவில் வாசலில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாளநல்லுார் கிராமத்தில், புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் சாலையின் மறுமுனையில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்கிறது. மேலும் அதிகாலையில் சாலையை கடக்கும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இந்நிலையில், 'தினமலர்' நாளிதழில் புகார் பெட்டி பகுதியில், கொளஞ்சியப்பர் கோவில் வாசலில் பேரி கார்டுகள் அல்லது வேகத்தடை அமைத்து, பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த நபர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கொளஞ்சியப்பர் கோவில் வாசலில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்கும் வகையில் இருபுறம் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.