மாவட்டத்தில், பெண்ணாடம் பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்டமாகவும் உள்ளது. இங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, வார்டு மக்கள் பட்டா மாற்றம், உட்பிரிவு, வாரிசு சான்று, ஆதரவற்ற விதவை சான்று, முதியோர் உதவித்தொகை, விவசாயம் சார்ந்த சான்றிதழ்கள், கல்விச்சான்றிதழ் பெறுவது உட்பட பல்வேறு காரணங்களுக்காக தினசரி வந்து செல்கின்றனர். மேலும், அருகிலுள்ள சில கிராமங்களில் அலுவலகம் சேதமடைந்ததால் அவர்களும் பெண்ணாடம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தங்கி பணிபுரிகின்றனர். இதனால் வி.ஏ.ஓ., அலுவலகம் பகுதி கூடுதலாக மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வந்து செல்வோரிடம் அங்கு காத்திருக்கும் புரோக்கர்கள் அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து, அந்த வேலையை தாங்கள் முடிப்பதாக நம்ப வைத்து, அவர்களிடம் மனு எழுத குறைந்தபட்சம் 100 முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரை வாங்குகின்றனர். மேலும் பட்டா மாற்றம், திருத்தம், உட்பிரிவு உள்ளிட்டவைகளுக்கு வி.ஏ.ஓ.,க்களுக்கு 5 ஆயிரம், புரோக்கர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் என பேசி, பணத்தை வாங்கி விடுகின்றனர். சிக்கலான நில பிரச்னைகளுக்கு பெரிய தொகையை கறந்து விடுகின்றனர். பொது மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. அதனால், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு புரோக்கர்களின் ராஜ்ஜியத்தில் இருந்து வி.ஏ.ஓ., அலுவலகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.