| ADDED : நவ 22, 2025 05:40 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களை தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, பழனி, கடலுார், சிதம்பரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஒசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பஸ் இயக்கப்படுகிறது. இங்கு, தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களை டிரைவர்கள் சிலர் நிலைகளில் நிறுத்தாமல், தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால், பஸ் நிலையத்திற்குள் இருந்து பஸ்கள் வெளிய செல்லமுடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், டிரைவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இதனால், பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பஸ்களை அந்தந்த நிலைகளில் நிறுத்தி எடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.