| ADDED : நவ 28, 2025 06:28 AM
பண்ருட்டி: உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றங்கரையில் 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட் டுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல் ,டேவிட்ராஜ்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கூறியதாவது: உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயத்தின் எடை, 4.35 கிராம். நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ஸ்ரீராஜராஜ என பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. எனவே, கி.பி., 985ம் ஆண்டு முதல் 1014ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த முதலாம் ராஜராஜ சோழன் கால நாணயம் என தெரியவந்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியபடி ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம் விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் ஸ்ரீராஜ ராஜ என எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில் 50க்கும் மேற்பட்ட ராஜராஜ சோழனின் செப்பு நாணயங்கள் கிடைத்த நிலையில் தற்போது வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.