| ADDED : பிப் 21, 2024 08:04 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி நகராட்சி தி.மு.க., வசம் உள்ளது. இங்கு, நகராட்சி தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. இதனால், வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் மெத்தனம் நிலவுவதாக கவுன்சிலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.குறிப்பாக ஆளும் கட்சி கவுன்சிலர்களே, தலைவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து அமைச்சர் காதுக்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரையில், அவரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் தலைமையில் திட்டக்குடியில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. இதில் தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்களில் 5பேர் மட்டுமே பங்கேற்றனர். அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை ஆளும்கட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், அதுபற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல், அமைச்சர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், சொந்த கட்சிக்கு எதிராகவே, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்வது, எதிரணிக்கு கொண்டாட்டமாக உள்ளது.