| ADDED : பிப் 17, 2024 06:24 AM
சிதம்பரம் : காங்., கட்சியை முடக்க முடியாது என மாநிலத் தலைவர் அழகிரி கூறினார்.டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிதம்பரத்தில் காங்., மற்றும் விவசாய சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்., தலைவர் அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஓராண்டு காலமாக டில்லியில் விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, வேளாண் அவசர சட்டத்தை பிரதமர் மோடி திரும்ப பெற்றார். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததால் குடும்பத்தோடு டில்லிக்கு அருகில் அமைதியாக போராடுகின்றனர்.ஆனால், போராட்டத்தை கலைக்க டில்லி போலீசார், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது தவறானது. ஆனாலும், விவசாயிகள் வன்முறையின்றி போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு பிரதமர் மோடி பதில் கூற வேண்டும். காங்., ஆட்சிக்கு வந்தால் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.விவசாயிகள் போராட்டம் குறித்து கவலையின்றி, அபுதாபிக்கு சென்று நாராயண கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். நாட்டிற்கு உணவு அளிக்கக் கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.கடந்த 6 மாதமாக கணக்கு காட்டவில்லை எனக் கூறி காங்., கட்சியின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். காங்., வரி ஏய்ப்பு நடத்தவில்லை. காலதாமதம் என்பது சரி செய்யக் கூடியது. அதற்காக 200 கோடி ரூபாய் அபராதம் எப்படி கட்டுவது. காங்., கட்சியை முடக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.