| ADDED : ஜூன் 26, 2024 02:41 AM
கடலுார் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு, குறிப்பிட்ட அளவு, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர திருவந்திபுரம், கேப்பர்மலை பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் துாய்மை படுத்தி, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, திருவந்திபுரத்தில் இருந்து வரும் குடிநீர் பைப் மற்றும் பாதாளசாக்கடை திட்ட கழிவுநீர் ஆகியவற்றிக்காக, 2 பைப் லைன்கள் அமைக்க அண்ணா மேம்பாலத்திற்கு இணையாக புதியதாக குழாய் தாங்கி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோல், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அண்ணா மேம்பாலத்தில் புதிதாக ராட்சத குழாய் அமைக்கப்பட்டு பணிகள்நிறைவடைந்துள்ளது. தற்போது கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் வேறு பாதையில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதனால், கடலுார்மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குடிநீர் அளவு, 3 நாட்களுக்கு குறைவாக சப்ளை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடலுார் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலுார் மாநகராட்சி பகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் உந்துக்குழாய் கடலுார் மாநகரின் மையத்தில் அமைந்துள்ள கெடிலம் ஆற்று பழைய பாலத்தில் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது ஆற்று பாலத்தில் புதியதாக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே குடிநீர் உந்து குழாய் அமைப்பினை வேறு வழியில், மாற்றி அமைக்கும் பணி இன்று (26ம் தேதி) மற்றும் 27 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி, கடலுார் மாநகராட்சிக்கு வரப்பெறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.எனவே, மாநகராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் நாளை (27ம் தேதி) முதல் 29ம் தேதி வரையில், 3 நாட்களுக்கு காலை குடிநீர் வினியோகத்தில் அளவு குறைவு ஏற்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேணடும் என, தெரிவித்துள்ளார்.