| ADDED : பிப் 13, 2024 06:00 AM
கடலுார்: கடலுார் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் 'சீல்' வைக்கின்றனர். அதன்படி, திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் அருகில் கவரிங் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இது தொடர்பாக சேம்பர் ஆப் காமர்ஸ் கடலுார் தலைவர் துரைராஜ் தலைமையில், நிர்வாகிகள் தேவி ஓட்டல் முருகன், வள்ள விலாஸ் சீனுவாசன், சுமங்கலி சில்க்ஸ் அன்சாரி, சன் பிரைட் பிரகாஷ், செல்லபாண்டியன், மாஸ்டர் பேக்கரி ராஜா, சதீஷ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் காந்தி ராஜை சந்தித்து முறையிட்டனர். வியாபாரிகள் தரப்பில் ' வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் வரி செலுத்த கால அவகாசம் வேண்டும். ஆனால், கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் கொடுப்பதை ஏற்க முடியாது. வியாபாரிகளை தரக்குறைவாக பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.அப்போது, வரி செலுத்த அவகாசம் கேட்பதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. குறிப்பிட்ட தொகை செலுத்தினால் மட்டுமே 'சீல்' அகற்றப்படும் என, கமிஷனர் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், கமிஷனரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சேம்பர் ஆப் காமர்ஸ் துரைராஜ் கூறுகையில், 'வரி விவகாரம் தொடர்பாக மாநகராட்சி தீர்வு காண வேண்டும். வரி செலுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் மாநகராட்சியை கண்டித்து கடையடைப்பு போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்' என்றார். முன்னதாக, மேயர் சுந்தரி ராஜாவிடம், வரி செலுத்த கால அவகாம் கேட்டு, வியாபாரிகள் மனு அளித்தனர்.