கடலூர் : விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ளூர் வியாபாரிகள் 'சிண்டிகேட்' அமைத்து செயல்படுவதால், விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விருத்தாசலத்தில் தாலுகா அலுவலகம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கி வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு மங்கலம்பேட்டை, கம்மாபுரம், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடம் என சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தினசரி 5,000 நெல் மூட்டைகள் உட்பட பல்வேறு தானியங்களாக 10 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளை 'லாட்' பிரித்து வைக்கப்படும். அதனை வியாபாரிகள் தரம் பார்த்து விலை நிர்ணயம் செய்வார்கள். கூடுதல் விலை கேட்கும் வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்வதும், அதற்கான பணத்தை அன்று மாலைக்குள் வழங்கப்படும். இங்கு நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் அதனை கொள்முதல் செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வரத் துவங்கினர். இதனால், விவசாயிகளுக்கு அவர்கள் கொண்டுவரும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்து வந்தது. வெளி மாவட்ட வியாபாரிகள் வருகையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஊழியர்கள் சிலரின் ஆதரவுடன் வெளியூர் வியாபாரிகளை ஏலத்தில் பங்கேற்காத வகையில் தடை ஏற்படுத்தினர். உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை மிகக் குறைந்த அளவிற்கு விலை நிர்ணயம் செய்து வாங்குகின்றனர். அதற்கான தொகையையும் உடனடியாக வழங்குவதில்லை. விவசாயிகளிடம் வாங்கிய விளை பொருட்களை, வெளியூர் வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து, அவர்களிடம் பணத்தை வாங்கி இரவு நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். இதனால் வெகு தொலைவிலிருந்து வரும் விவசாயிகள், பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்த போதிலும், உள்ளூர் வியாபாரிகளின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. மாறாக, அவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, கடந்த வாரம் அதிசய பொன்னி ரக நெல் மூட்டை (75 கிலோ) 420 ரூபாய் என உள்ளூர் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால், இதே ரக நெல் பிற பகுதிகளில் மூட்டை 750 ரூபாயிலிருந்து 900ம் வரை விலை போகிறது. உரிய விலை கிடைக்கும் என வெகு தொலைவிலிருந்து நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகள், அதனை திருப்பி எடுத்துச் சென்று பாதுகாக்க முடியாத காரணத்தினால் அடிமாட்டு விலைக்கு வேதனையோடு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகளின் வருகை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, உள்ளூர் வியாபாரிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்திடவும், வெளியூர் வியாபாரிகள் நேரடியாக ஏலத்தில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருத்தாசலம் பகுதி விவசாயிகளின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.