| ADDED : ஆக 23, 2011 11:34 PM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் எஸ்.எம்.எஸ்., வருகை பதிவு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் படிப்படியாக அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்தப்படும் என கலெக்டர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை பதிவை தினமும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் முறையை கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல் முறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்வது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இம்முறையை மேலும் விரிவுபடுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் வருகை பதிவினை எஸ்.எம்.எஸ்., மூலம் கலெக்டர் அலுவலத்திற்கு அனுப்பும் திட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் படிப்படியாக அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்ற மாவட்டத்திற்கு முன் உதாரணமாக எஸ்.எம்.எஸ்., மூலம் வருகை பதிவினை அளித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்களும் இத்திட்டத்திற்கு தங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.