உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு வீடாக விபரம் சேகரிக்கிறது தி.மு.க.,

வீடு வீடாக விபரம் சேகரிக்கிறது தி.மு.க.,

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதையொட்டி, தமிழகத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க., புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும் என, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தி.மு.க., கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.சிதம்பரம் சட்டசபை தொகுதியில், ஆளுங்கட்சியான தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு கீழ், 100 ஓட்டுக்கு, ஒரு உறுப்பினர் என ஒவ்வொரு பூத்திற்கும் சுமார் 10 பேர் வீதம் நியமித்து, தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில், தி.மு.க., தலைமையில் இருந்து, திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களில் பயன்பெறும் படிவம் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மூலம், நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.சிதம்பரம் சட்டசபை தொகுதியில் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு திராவிட மாடல் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில், மகளிர் உரிமை தொகை கிடைத்துள்ளதா, அல்லது கிடைக்கவில்லையா, ரேஷன் கார்டு எண், மொபைல் எண், ஓட்டுப்போட தகுதியானவர்களின் பெயர்கள் என 6க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.இந்த படிவத்தை வீடு, வீடாக சென்று பூர்த்தி செய்ய விபரம் தெரிந்த பொறுப்பாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பூர்த்தி செய்துவிடுகின்றனர். ஆனால், விபரம் தெரியாத பொறுப்பாளர்கள், வீடு, வீடாக சென்று விபரங்களை சேகரித்து படிவத்தை பூர்த்தி செய்ய, பட்டதாரி பெண்களை தேடுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து விபரங்களை சேகரித்து படிவத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் பட்டதாரி பெண்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை