| ADDED : பிப் 14, 2024 03:29 AM
கடலுார் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தி.மு.க., வை சேர்ந்த சுந்தரி ராஜா மேயரானார். அதே சமயத்தில், தி.மு.க.,வில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 10 பேர் எதிரணியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள், ஒவ்வொரு முறை நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வெளிநடப்பு செய்து வருகின்றனர்.தங்களின் வார்டுக்கு எதுவும் செய்யாமல், புறக்கணிக்கப்படுகிறது என்பதுதான் இவர்களது தலையாய கோரிக்கையாக உள்ளது. அதே சமயத்தில், 'நான் தினமும் அலுவலகத்தில் தான் உள்ளேன், என்னிடம் எந்த கோரிக்கையும் யாரும் கொடுப்தில்லை என, கூறி மேயர் சுந்தரி ராஜா தப்பி விடுகிறார். இதனால், ஒவ்வொரு மாதாந்திர கூட்டமும் போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இப்பிரச்னை இப்படியே 2 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டது. ஆனால் வெற்றி பெற்ற எதிரணியினர் எந்த பலனையும் அடையாமல் உள்ளனர்.இந்நிலையில், விரைவில் லோக்சபா தேர்தல் வருகிறது. அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதற்காக, எதிரணியினரை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எதிரணி இதுவரை, விட்டுக்கொடுக்காமல் முரண்டு பிடிப்பதால், பேச்சுவார்த்தை இதுவரை இழுபறி நிலையிலேயே உள்ளது. தேர்தல் அறிவிப்புக்குள் பேரம் முடிந்துவிடும் என, முக்கிய நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.