| ADDED : பிப் 21, 2024 10:51 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சிகோட்ட மேலாளர் அன்பழகனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இதுகுறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர், வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் அளித்த மனு:பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் 148 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ரயில் நிலையத்தை 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், 50 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையம் அருகிலேயே தனியார் அனல்மின் நிலையம், பிச்சாவரம் சுற்றுலா மையம், அன்னங்கோவில் மீன் பிடி இறங்கு தளம், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ரயிலில் பயணம் செல்கின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவில், மீட்டர் கேஜ் இருந்த வரை, விரைவு ரயில்கள் அதிகளவில் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று சென்றது. தற்போது, எட்டு ரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. கூடுதல் பயணிகள் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் சோழன், செந்துார், பாமணி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அவருடன், வர்த்தக சங்க துணை தலைவர் அய்யப்பன், துணை செயலாளர் கவிமதி ஆகியோர் உடனிருந்தனர்.