பெண்ணாடம்: பெண்ணாடம் குறுவட்டத்தில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளதால் விவசாயிகள் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திட்டக்குடி தாலுகா, பெண்ணாடம் குறுவட்டத்தில் பெண்ணாடம், மாளிகைக்கோட்டம், கொடிகளம், கோவிலுார், பாசிக்குளம், மோசட்டை, நந்தப்பாடி, தீவளூர் உட்பட 44 வருவாய் கிராமங்கள் உள்ளன. குறுவட்டத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் உள்ளார். வருவாய் குறுவட்டத்தில் உள்ள ஏ.அகரம், கொத்தட்டை ஆகிய கிராமங்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிரந்தர வி.ஏ.ஓ.,க்கள் இல்லை. அருகிலுள்ள கிராம வி.ஏ.ஓ.,க்கள் கூடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று, துறையூர் கிராமத்தில் துறையூர், முருகன்குடி, காரையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் லஞ்சம் வாங்கி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதில் இருந்து இதுவரை அருகிலுள்ள கிராம வி.ஏ.ஓ.,க்கள் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெண்ணாடம் வி.ஏ.ஓ., கூடுதல் பணியில் உள்ளார். அவரும் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்கள் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் பெற முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும், விவசாயிகளும் பயிர் கடன் பெற சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் பெற முடியாமல் அலைகழிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். எனவே, துறையூர், ஏ.அகரம், கொத்தட்டை வருவாய் கிராமங்களுக்கு நிரந்தர வி.ஏ.ஓ.,க்கள் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.