| ADDED : நவ 18, 2025 06:41 AM
கடலுார்: வேளாண் பணியின்போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு, கணிதா, பாரிஜாதம், அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஆகியோர் கடந்த அக்.15ம் தேதி, மக்காச்சோள வயலில் களை எடுக்கும் பணியின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அதே போல் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி விவசாய பணியின் போது உயிரிழந்தார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியாக 10 ல ட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நேற்று மதியம் 12 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடக்கும் அரங்கின் முன்பு மாநில கரும்பு விவசாய அணி செயலாளர் வீரமணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுநகர் சப்இன்ஸ்பெக்டர் பிரசன்னா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.