| ADDED : நவ 16, 2025 04:02 AM
புவனகிரி: புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ,மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கடலுார் மாவட்டத்தில், 1,01,108 பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் மூலம் 5,043பேர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மாவட்ட நிர்வாகம் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதன் விளைவாக கடந்த, 2024--25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப்பொதுத் தேர்வில், 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சியில் 10ஆவது இடமும், அரசுப் பள்ளிகளின் அளவில் 5ஆவது இடமும் பெற்றுள்ளது. மாவட்டத்தில், 105 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 30 அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 146 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில் 11 ம் வகுப்பு பயிலும் 9,900 மாணவர்கள் மற்றும் 10,451 மாணவிகள் என மொத்தம் 20,351 பேர் பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட இடைநிலை அலுவலர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை சரவண ஜான்சிராணி நன்றி கூறினார்.