| ADDED : பிப் 06, 2024 06:04 AM
கடலுார் : வழக்கு பதியாமல் இருக்க 'கூகுள்-பே'யில் லஞ்சம் வாங்கிய, போலீஸ் ஏட்டை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.கடலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் சக்திவேல், 39; இவர், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் கடந்த 3ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதால் சந்தேகமடைந்த அவர், பைக்கில் விரட்டிச் சென்று, உழவர் சந்தை அருகில் காரை மடக்கி நிறுத்தி சோதனை செய்ததில், 2 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது.காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், ைஹதராபாத்தைச் சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவர்கள் என்பதும், பிச்சாவரத்திற்கு சுற்றுலா வந்ததும் தெரிந்தது. இதையடுத்து வழக்கு பதியாமல் இருக்க, அவர்களிடம் ஏட்டு சக்திவேல் ரூ. 10 ஆயிரம் கேட்டுள்ளார். அந்த பணத்தை, தனது நண்பரின் 'கூகுள்-பே' எண்ணுக்கு அனுப்ப கூறி பெற்றுள்ளார்.இதுகுறித்து, ஆன் லைன் மூலம், ஆதாரத்துடன், பணம் கொடுத்த மாணவர்கள் புகார் அளித்தனர். எஸ்.பி.,ராஜாராம் விசாரணை நடத்தியதில், சக்திவேல் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து ஏட்டு சக்திவேலை, சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.